அமராவதி: ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டு, அதற்காக சுமார் 34,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பிறகு ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும், ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களைக்கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டார்.
இதற்கு கடும் எதிர்ப்புத்தெரிவித்து, அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவின் தலைநகராக அமராவதியே நீடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கரோனா ஊரடங்கு காலத்திலும் இந்த விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது.
கடந்த 2021 டிசம்பர் மாதத்தில், அமராவதி விவசாயிகள், திருப்பதி வரை பாத யாத்திரை சென்றனர். இதுதொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் மூன்று தலைநகரங்கள் அமைக்கும் மசோதாவை கைவிடுவதாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
இந்த நிலையில், அனைத்து வசதிகளையும் கொண்ட தலைநகராக அமராவதியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், விவசாயிகள் மீண்டும் பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளனர். 60 நாட்களுக்கு நடைபெறும் இந்த யாத்திரை, அமராவதியிலிருந்து ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அரசவெல்லி வரை செல்கிறது. இதில் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:இந்திய பால்வளத் துறையின் மதிப்பு 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்