புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர்ந்து 3ஆவது முறையாகவும், 25 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ள மல்லாடி கிருஷ்ணா ராவ்விற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது, “நான் போட்டியிடவில்லை என்றாலும் தொடர்ந்து மக்கள் சேவை செய்வேன்” எனத் தெரிவித்தார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மல்லாடி கிருஷ்ணராவ். இவர் 1996ஆம் ஆண்டில் இருந்து ஏனாம் பகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு வருகின்றார். இதுவரை 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்ந்து 25 ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்.
மேலும் 3 முறை அமைச்சராக பணியாற்றிய அவர் 3ஆவது முறையாக சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் அவருக்கான பாராட்டு விழா சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமசிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜஹான் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், என் ஆர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரக்ள், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது சட்டப்பேரவை உறுப்பினர் வாழ்க்கை குறித்தும், கஷ்டப்பட்டு வாழ்ந்து மேன்மையான நிலைமைக்கு வந்தது குறித்தும் பேசினார். மேலும், “நான் போட்டியிடவில்லை என்றாலும் தொடர்ந்து மக்கள் சேவை செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் நினைவுப்பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணிந்து விளையாடுங்க தம்பி - மல்லாடி கிருஷ்ணாராவ்