டேராடூன்: இமயமலையில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் கடந்த 6ஆம் தேதி, நில அதிர்வு காரணமாக வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. மொத்த நகரமும் நில அதிர்வால் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த சுமார் 600 வீடுகளிலும் பெரிய விரிசல்கள் ஏற்பட்டன. கோயில் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் உத்தரகாண்ட் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாநில நிபுணர்கள் குழு, நில அதிர்வுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. செயற்கைக்கோள் தரவுகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டதில், மொத்த ஜோஷிமத் நகரமும் மண்ணுக்குள் புதைந்து வருவதாக தெரியவந்தது. ஜோஷிமத் நகரமும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் ஆண்டுக்கு இரண்டரை இன்ச் என்ற அளவுக்கு மண்ணுக்குள் புதைந்து வருவதாக நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் ஜோஷிமத் சம்பவத்துக்கு 'மொரைன் கோட்பாடு' காரணமாக இருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பனியாறுகளால் அடித்துக் கொண்டு வரப்பட்ட படிவுகளின் குவியல் மீது ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளதாகவும், இந்த அடித்தளம் பலவீனமான நகரில் அளவுக்கு அதிகமான கட்டிடங்கள் எழுப்பியதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜே.பி.மைதானி கூறுகையில், "ஜோஷிமத் நகரம் பனியாறுகளால் அடித்துவரப்பட்ட கழிவுகளின் மீது அமைந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஜோஷிமத் சம்பவம் தொடக்கம்தான். கேதர்நாத்தில் தற்போது கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கேயும் இதே நிலை ஏற்படக்கூடும். காரணம், கேதர்நாத்தில் 2013ஆம் ஆண்டில் நடந்த பெருவெள்ளத்தின்போது அடித்துவரப்பட்ட கழிவுகள் மீதுதான் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது.
கேதார்நாத்தை சுற்றி அமைக்கப்படும் அனைத்து வகையான கட்டுமானங்களும் ஒரு மொரைன் மேல் கட்டப்பட்டவை என்றே அர்த்தம். இதனால் கேதர்நாத் மட்டுமல்லாமல் உயரமான இமயமலைப் பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எப்போதும் நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: Joshimath: ஹோட்டல்கள் இடிப்பு.. மத்திய அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை