ஹைதராபாத் : பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை (செப்.1) தெரிவித்துள்ளது.
மேலும், பசு மாட்டிற்கு இந்திய கலாசாரத்தில் முக்கிய பங்கு உண்டு என்றும் அது நாடு முழுவதும் ஒரு தாயாக போற்றப்படுகிறது என உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயதான இஸ்லாமியர் ஒருவருக்கு பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பிணை (ஜாமின்) மறுக்கப்பட்டது.
சம்பல் மாவட்டத்தில் பசுவதை தடுப்புச் சட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் பிணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 12 பக்க உத்தரவு ஒன்றை வெளியிட்டார்.
அதில்,
- இந்துக்களின் அடிப்படை உரிமைகளில் பசு பாதுகாப்புக்கு உரிமை உள்ளது.
- பசுவை தேசிய விலங்காக அறிவிக்க ஒன்றிய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்.
- நாட்டின் கலாசாரம் பாதிக்கப்படும் போது நாடும் பலவீனமடையும் என்பதை அனைவரும் அறிவோம்.
- அடிப்படை உரிமைகள் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமல்ல, பசுவை வழிபடும் மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் அதனை பாதுகாக்க உரிமை உள்ளது.
- சில இடங்களில் பசு பாதுகாப்பை பேசுபவர்களே பசு மாமிசம் உண்பவர்களாக இருப்பது வேதனையளிக்கிறது.
- அரசு மாட்டுக் கொட்டகைகளை நன்கு பராமரிக்க வேண்டும், இதனை மாநில- ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்
எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர் பசுக்களை வெட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளார். அவர் பிணையில் விடுவிக்கப்பட்டால் மீண்டும் இதே குற்றத்தை செய்வார். ஆகவே அவருக்கு பிணை அளிக்க நீதிமன்றம் மறுக்கிறது.
“பசுக்களுக்கு இந்துக்கள் மட்டும் முன்னுரிமை அளிக்கவில்லை, பாபர், ஹூமாயூன், அக்பர் உள்ளிட்ட இஸ்லாமிய மன்னர்களும் மைசூர் நவாப் மற்றும் ஹைதர் அலி ஆகியோரும் பசுக்கள் வதைக்கு தடை விதித்துள்ளனர். பசு இம்மண்ணின் விலங்கு” எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு!