உத்தரப் பிரதேசத்தில், தற்போது பஞ்சாயத்து தேர்தல் நடந்து வருகிறது. இதனை ஒத்திவைக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்த நிலையில், அம்மாநில தேர்தல் ஆணையமும், அரசும் பஞ்சாயத்து தேர்தலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட 136 ஆசிரியர்கள் (சிக்ஷா மித்ராஸ்), கண்காணிப்பாளர்களாகச் செயல்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம், அம்மாநில தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மேலும் செய்திதாளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தானாக முன்வந்து அலகாபாத் நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதி சித்தார்த்த வர்மா மற்றும் நீதிபதி அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தராத அம்மாநில தேர்தல் ஆணையம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியது. இனி நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தல்களில், கரோனா விதிகளைப் பின்பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இல்லையெனில், அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது துளியும் இல்லை; மாநில அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது எனக் கூறி வரும் நிலையில், அம்மாநிலத்தில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அவதானித்த நீதிபதிகள், 70 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் பெற்று தொழில்ரீதியாக முன்னேறியிருந்தாலும் கூட, இன்னும் மக்களுக்கு ஆக்ஸிஜன் கூட வழங்க முடியாதது வெட்ககேடு' என, அம்மாநில அரசை கடுமையாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
அம்மாநில சுகாதாரத்துறையால் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது எனத் தெரிவித்த நீதிமன்றம், லக்னோ, பிரயாகராஜ், வாரணாசி, ஆக்ரா, கான்பூர், கோரக்பூர், மற்றும் ஜான்சி ஆகிய அரசு மருத்துவமனைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் நிலவரத்தை செய்தியாக வெளியிடுமாறு குறிப்பிட்டது.
இதனால் ஆக்ஸிஜன் தேவைக்காக மருத்துவமனையை நாடும் நோயாளிகள், அங்கு காத்திருப்பதைத் தவிர்ப்பார்கள். உத்தரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களின் நிலைமை குழப்பமானதாக இருப்பதாகத் தெரிவித்த நீதிமன்றம், கடந்த கால தொற்றுநோய்களின் வரலாறு நமக்குக் கூறுவது போல், வளமுள்ளவர்கள் தப்பிப் பிழைப்பார்கள்; மற்றவர்கள் சரியான மருத்துவ சிகிச்சைக்கான பரிதவிப்புடன் உயிரிழப்பார்கள் என வருத்தம் தெரிவித்தது.
போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 'கடந்தாண்டு வைரஸ் தொற்று குறைந்த நிலையில், பஞ்சாயத்து தேர்தல் போன்ற நடவடிக்கைகளால் மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது.
அரசு விழிப்புடன் செயல்பட்டிருந்தால், இரண்டாவது அலையின் தாக்குதலை எதிர்கொள்ள தன்னை (உ.பி. மாநில அரசு) தயார்படுத்தியிருக்கும். அரசு உண்மையான பொது சுகாதாரப் பிரச்சினைகளை மறந்து, மக்கள் உயிரிழக்க அனுமதித்தால் எதிர்கால சந்ததியினர் ஒருபோதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்' என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.