அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் விதமாக பல்கலை நிர்வாகம் ஆன்லைனில் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்தது. அந்நிகழ்வில் பல்கலையின் வரலாற்றை விவரிக்கும் கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ”கடந்த 1920ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அலிகார் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு ( gazette notification) அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. சர் சையத் அகமது கான் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
அப்போது தொடங்கப்பட்டு தற்போதுவரை பல்வேறு மாணவர்களை அலிகார் பல்கலைக்கழகம் வளர்த்தெடுத்துள்ளது. வெற்றிகரமாக தனது 100ஆவது ஆண்டையும் பல்கலைக்கழகம் நிறைவு செய்துள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக, ஒரு மாத கால விழாவினை திட்டமிட்டிருந்தோம். கரோனா காரணமாக அதை செய்யமுடியவில்லை.
இருந்தபோதும் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட பல விவாதங்களை நடத்தினர். இறுதியில் செவ்வாயன்று விழாவினை சிறப்பாக நடத்தி முடித்தோம்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவரும், அங்கு பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியருமான ரசூல்லா கான்,”அலிகார் பல்கலைக்கழகம் உள்கட்டமைப்பு உள்பட பல விஷயங்களில் நிறைய மாறிவிட்டது. இங்குள்ள பழைய விஷயங்கள் வரலாற்றில் மட்டுமே காண கிடைக்கின்றன.
அலிகாரில் எனது ஐம்பது ஆண்டுகளின் பயணம் தற்போதைய மாற்றத்தை எனக்கு புரிய வைத்துள்ளது. இங்கு கற்பிக்கும் தரம் மாறிவிட்டது, கல்வித் துறையில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளது”என்றார்.