சிலிகுரி (மேற்குவங்கம்): மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் ‘நைரோபி பூச்சி’ அல்லது ‘ஆசிட் பூச்சி’ என்னும் ஆப்பிரிக்க பூச்சி தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை சிலிகுரி பேரூராட்சிக்குட்பட்ட ஆஷ்ரம்பாரா, குருங் பஸ்தி, சம்பாசாரி, தேபிடங்கா, மட்டிகரா, காப்ரைல், தேஷ்பந்துபாரா, நக்சல்பாரி, கரிபாரி மற்றும் பன்சிதேவா பகுதிகளில் இந்த பூச்சி கடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பூச்சி முக்கியமாக அதிக மழை பெய்யும் பகுதிகளில் வாழ்கிறது. குறிப்பாக இமயமலை அடிவாரத்தில், அதிக மழைப்பொழிவு காரணமாக, இந்தப் பூச்சி உயிர்வாழ்கிறது. மேலும் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளதால், இந்த ஆசிட் பூச்சிகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் இனப்பெருக்கம் செய்துள்ளது.
பரவும் முறை: இந்தப் பூச்சிகள் ஆரஞ்சு, சிவப்பு மற்றும் கருப்பு நிறமாக காணப்படுகிறது. அதன் உடலில் பெடிடின் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது. இந்த அமிலம் மனித தோலுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக, இந்த பூச்சி கடிக்காது. இருப்பினும் பூச்சி மனித உடலில் அமர்ந்து செல்லும்போது, அதன் உடலில் இருந்து வெளியேறும் பெடிடின் அமிலம் தோலில் சில காயங்களை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஏற்படும் காயத்திலும் எரிச்சலை உண்டாக்குகிறது. தொடர்ந்து காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மேற்கூறிய அறிகுறிகள் ஏதும் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு, சுகாதாரத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரம் மருத்துவர்களின் சரியான ஆலோசனையை பின்பற்றினால், 8 முதல் 10 நாள்களில் குணமடையலாம். இரவு நேரத்தில் முழுக்கை சட்டை, பேன்ட், கொசுவலை ஆகியவற்றைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதையும் படிங்க: கருக்கலைப்பு, பக்கவாதத்திற்கு காரணமா? - பகீர் கிளப்பும் அதிர்ச்சி ரிப்போர்ட்!