உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்த நிலையில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உத்தரப் பிரதேச தேர்தல் பார்க்கப்படுகிறது. 403 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு 266க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக வெற்றி முகத்தில் உள்ளது.
உத்தரப் பிரதேச வரலாற்றில் ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சியில் இருந்த பின் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வாகும் பெருமையை யோகி ஆதித்யநாத் பெற உள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். யோகி போட்டியிடும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இதுவாகும். இருப்பினும் இதே பகுதியிலிருந்து மக்களவைக்குப் பலமுறை தேர்வாகியுள்ளார்.
கர்ஹால் தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் முன்னிலை வகிக்கிறார். சமாஜ்வாதி கட்சி 128, பகுஜன் சமாஜ் கட்சி 3, காங்கிரஸ் 2, மற்றவைகள் 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இதனிடையே முன்னிலை நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ்யாதவ், இது பாஜகவின் உளவியல் யுக்தி என சந்தேகம் கிளப்பியுள்ளார்.
முன்னிலை நிலவரங்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல எனவும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை, மையங்களிலிருந்து வெளியேற வேண்டாம் எனவும் அவர் கட்டளை விடுத்துள்ளார். சமாஜ்வாதி தொண்டர்களின் மன உறுதியை குலைத்துவிட்டு பிற்பகல் 3 மணிக்கு மேல் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகவும் அவர் சந்தேகம் கிளப்பியுள்ளார்.
எனவே இறுதி வரை வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து தொண்டர்கள் வெளியேற வேண்டாம் என சமாஜ்வாதி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 312 இடங்களில் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உ.பியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் யோகி ஆதித்யநாத்...