லக்னோ: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் முக்கிய சாட்சியான உமேஷ் பால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதால், உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
2005ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால், சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் முன்னாள் எம்.எல்.ஏ அஷ்ரப் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான உமேஷ் பால் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பாதுகாப்பிற்கு இருந்த இரு காவலர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வீசி விட்டும் தலைமறைவாகினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் ரவுடியிசம் தலைவிரித்து ஆடுவதாகவும், அதை ராம ராஜ்ஜியம் தடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் கூறினார். சட்டென எழுந்து பதிலளித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சியினரே பயங்கரவாதிகளை ஆதரவளிப்பதாக கூறினார்.
மேலும், ரவுடிகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து வரவேற்றுவிட்டு, தற்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை நிலவுவதாக சமாஜ்வாதி கட்சியினர் நாடகமாடுவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார். முன்னாள் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அடிக் அகமதுவை சமாஜ்வாதி கட்சியே வளர்த்துவிட்டதாக அகிலேஷ் யாதவை காட்டி, எச்சரிக்கும் பாணியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
மேலும் மாநிலத்தில் ரவுடியிசத்தையும், ரவுடிகளையும் வேரோடு அழிக்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார். இதற்கு அகிலேஷ் யாதவ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மீண்டும் எதிரொலிக்கும் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை: பஞ்சாப் அரசியலில் ஏற்படும் தாக்கம் என்ன?