மும்பை (மகாராஷ்டிரா): தேசியவாத காங்கிரஸ் கட்சியில் களேபரம் நடைபெற்று 12 நாட்கள் ஆகிய நிலையில், மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் நேற்று (ஜூலை 14) இரவு தெற்கு மும்பை பகுதியில் உள்ள தனது மாமாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரின் வீட்டிற்குச் சென்று உள்ள நிகழ்வு, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரத் பவாருக்கு எதிராக அஜித் பவார் போர்க்கொடி உயர்த்தி இருந்த நிகழ்விற்குப் பிறகு, சரத் பவாரின் இல்லத்திற்கு அஜித் பவார் தற்போது சென்று இருப்பது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநில அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக அதிகாரமிக்க பவார் குடும்பத்தில் இருந்து, புனே மாவட்டத்தின் பாராமதி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணி அரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தேசியவாத கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 8 பேர், அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், அவர்கள் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர். பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில், துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதனிடையே, சரத் பவாரின் மனைவி பிரதீபா பவாருக்கு கையில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக தெற்கு மும்பையில் உள்ள பீரிச் கேண்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. சிகிச்சை முடிந்த நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி இருந்தார்.
இந்த நிலையில், அஜித் பவார் தனது சித்தி பிரதீபாவை சந்தித்து நலம் விசாரித்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் ‘காகி’ என்று அழைக்கப்பட்டு வந்த பிரதீபா, கட்சியின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்து வந்த நிலையிலும், அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டது இல்லை.
அஜித் பவாருக்கும், பிரதீபாவுக்கும் எப்போதும் நல்ல, இணக்கமான உறவு நீடித்து வந்து உள்ளது. 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அஜித் பவாரும், தேவேந்திர பட்னாவிஸ் இணைந்து குறுகிய கால அரசாங்கத்தை அமைத்த நிலையில், அஜித் பவாரை மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வருவதில் பிரதீபா பவார் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
சரத் பவாருக்கும், அஜித் பவாருக்குமான மோதல் முற்றிய நிலையில், சரத் பவாரை கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுமாறு அஜித் பவார் தொடர்ந்து நெருக்கடி அளித்து வந்தார். ஆனால் சரத் பவார், தான் கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பதாகவும், கட்சி சின்னம் தன்வசமே இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அஜித் பவார் தலைமையிலான அணியும், சரத் பவாரைச் சேர்ந்த அணியும் தனித்தனியாக கூட்டத்தை நடத்தி வந்தன. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து, அஜித் பவாரை சரத் பவார் தலைமையிலான அணி நீக்கி உத்தரவிட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.