வாஷிங்டன்: உலக வங்கியின் தலைமை பொறுப்புக்கு இந்திய வம்சாவளியான அஜய்பால் சிங் பங்காவை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் விரைவில் பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியான அஜய்பால் சிங் பங்காவை, அமெரிக்க அதிபர் பைடன் பரிந்துரை செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவை பூர்வீகமாக கொண்ட அஜெய் பங்கா, டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில்(IIM) எம்பிஏ பட்டம் பெற்றார்.
நெஸ்லே இந்தியா நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்த அஜய் பங்கா, பின்னர் அமெரிக்கா சென்று பிரபல சிட்டி குரூப் நிறுவனத்தில் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, ஏடிஎம் அட்டை விநியோகிக்கும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மாஸ்டர் கார்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அவர், தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். பல்வேறு முன்னணி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அஜய் பங்காவுக்கு தொழில் மற்றும் நிதி சார்ந்த துறைகளில் 30 ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின், அதிபர் நிர்வாக ஆலோசனைக் குழுவில் அஜய் பங்கா அங்கம் வகித்துள்ளார். இதன் அடிப்படையில் உலக வங்கியின் அடுத்த தலைவராக அஜய் பங்கா, அமெரிக்க அதிபர் பைடன் பரிந்துரைத்து உள்ளார். வரும் ஜூன் மாத்தில் டேவிட் மல்பாஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அதன்பின் அந்த பதவிக்கு அஜய் பங்கா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கியின் தலைவராக அமெரிக்கரும், சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவராக ஐரோப்பியாவை சேர்ந்தவரும் நியமிக்கப்படுவது பொது வழக்கமாக கருதப்பட்டாலும், முதல் முறையாக ஒரு இந்திய அமெரிக்கரை உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்து உள்ளார்.
ஏற்கனவே சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃபின் துணை நிர்வாக தலைவராக இந்தியர் கீதா கோபிநாத் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கும் இந்திய வம்சாவளி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெக் உலகம் இந்தியர்கள் வசமாகி உள்ள நிலையில் தற்போது அதற்கு மெருகேற்றும் வகையில் உலக வங்கியும் ஒரு இந்தியரின் கையில் தஞ்சமடைந்து உள்ளது.
மேலும் ஒரு கூடுதல் சுவாரஸ்யத்தக்க தகவல் வெளியாகி உள்ளது. உலக வங்கியின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள அஜய் பங்கா, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்திய நாதல்லா, அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நரேன், ஆகிய மூன்று பேரும் ஐதராபாத் பப்ளிக் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காங்கிரஸ் 85வது காரிய கமிட்டி கூட்டம்.. காந்தி குடும்பம் ஆப்சென்ட்!