டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. டெல்லி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இன்று(அக்.28) காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீட்டு எண் 400-500 என்ற அளவில் மிகவும் மோசமாக இருந்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அளித்த தகவலின்படி அலிபூர், ஷாதிபூர், என்எஸ்ஐடி துவாரகா, சிரிஃபோர்ட், ஆர்கே புரம், பஞ்சாபி பாக், நேரு நகர், துவாரகா செக்டார் 8, பட்பர்கஞ்ச், அசோக் விஹார், நரேலா, வாசிர்பூர், பவானா, முண்ட்கா பகுதிகளில் காற்று மாசு அளவு மிகவும் மோசமாக உள்ளது.
இப்பகுதிகளில் காற்றின் தரக்குறியீட்டு எண் 300 - 400 என்ற அளவில் இருந்தது. குறிப்பாக, காசியாபாத்தில் காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், அங்கு காற்றின் தரக்குறியீட்டு எண் 405ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிகரித்துவருவதால், இதயம், நுரையீரல் நோய்கள், சுவாசப்பிரச்னைகள் இருப்போர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பது நல்லது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
காற்று மாசு தொடர்பாக டெல்லி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இருப்பினும், டெல்லியில் பாஜகவிடம் உள்ள மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்ட மூன்று குப்பைக்கிடங்குகளே காற்று மாசு அதிகரிக்கக்காரணம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க:டெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பு: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்