டெல்லி: பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவில் பயணிகள் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் 26, 2011 முதல் பிப்ரவரி 3, 2021 வரை பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன. அதில் பயணிகளின் பெயர், பிறந்த தேதி, தொடர்புத் தகவல், பாஸ்போர்ட் தகவல், டிக்கெட் தகவல், ஸ்டார் அலையன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவில் அடிக்கடி பயணிக்கும் பயணியர் தகவல்கள், பதிவுசெய்யும் போது பயன்படுத்தப்பட்ட கடன் அட்டை தகவல்கள் என அனைத்தும் கசிந்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.
பயணிகளின் விவரங்களை சேமிக்கும் தங்களின் தரவு சேமிப்பு நிறுவனத்திடமிருந்து இது தொடர்பான முதல் அறிவிப்பை 2021, பிப்.,25ஆம் தேதி அன்று பெற்றதாகக் கூறியுள்ள ஏர் இந்தியா, இச்சம்பவம் உலகளவில் 45 லட்சம் தரவுகளை பாதித்துள்ளதாக கூறியுள்ளது.
கடன் அட்டைகளின் சி.வி.வி., குறியீடு விவரங்களை தரவு சேமிப்பு நிறுவனம் வைத்திருக்காததால் அத்தகவல்கள் மட்டும் வெளியாகவில்லை. மேலும், பயனாளிகளின் கடவுச்சொல் எதுவும் கசியவில்லை. இருப்பினும் பயணிகள், பாதுகாப்பை உறுதி செய்ய கடவுச் சொல்லை மாற்றிக்கொள்ள ஏர் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், தங்களின் சர்வர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.