டெல்லி: கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே தற்போது மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மருந்துகளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் மருந்து, 2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்குப் பரிசோதிக்கப்பட உள்ளது.
2ஆவது, 3ஆவது கட்ட கிளினிக்கல் பரிசோதனைகளை நடத்திக்கொள்ள மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு கடந்த மே.12ஆம் தேதி இதற்கு அனுமதியளித்துள்ளது.
இந்த திட்டத்தின் பரிசோதனை டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ் உட்பல பல்வேறு மருத்துவமனைகளில் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே, 12 முதல் 18 வயதுடைய பிரிவினருக்கு தடுப்பூசி ஆய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தொடங்கி 6 முதல் 12 வயது சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்தி டெல்லி எய்ம்ஸ் பரிசோதிக்கவுள்ளது.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிவடையும் நிலையில், அடுத்தகட்டமாக 2 முதல் 6 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையானது, 12-18, 6-12 மற்றும் 2-6 வயதுக்குட்பட்டவர்களில் தலா 175 தன்னார்வலர்களுக்கு மூன்று கட்டங்களாக செலுத்தப்பட உள்ளது. 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி சோதிக்கவுள்ளனர்.
கோவிட்-19 மூன்றாம் அலை ஏற்படும்பட்சத்தில் அதன் தாக்கம் குழந்தைகளிடம் அதிகம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதைத் தடுத்து நிறுத்த தடுப்பூசி உருவாக்கும் முன்னேற்பாட்டில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு தடுப்பூசி போடாததால் பல ஊசிகள் போடும் நிலை- ரங்கசாமி உருக்கம்