உருமாறிய கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், அமெரிக்காவின் மாடர்னா, ரஷ்யாவின் ஃபைசர் தடுப்பூசிகளின் வரிசையில், இந்தியாவின் கோவாக்சின் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனாவிற்கு எதிராக முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுவரும் கோவாக்சினின் இறுதிகட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிவரும் இந்தக் கரோனா தடுப்பூசியைப் செலுத்திக்கொள்ள 500 தன்னார்வலர்கள் மட்டுமே முன்வந்துள்ளனர்.
ஆனால், இந்த இறுதிகட்ட சோதனைக்கு குறைந்தபட்சம் 1500 முதல் 2000 தன்னார்வலர்கள் தேவை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதன் இறுதிகட்ட சோதனைகள் தற்போது டெல்லி எய்ம்ஸில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் விஜய் குமார் குர்ஜார் தாமாக முன்வந்து கோவாக்சின் தடுப்பூசியைச் சோதனை முயற்சியாகப் பெற்றுக்கொண்டார்.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின் பேசிய மருத்துவர் விஜய் குமார், "கோவாக்சின் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இதில், பக்க விளைவுகள் எதுவும் இல்லை.
இந்த இறுதிகட்ட சோதனையில் தன்னார்வலர்கள் அதிகளவில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள்விடுத்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் உருமாறிய கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு