எதிர் வரும் கல்வியாண்டு முதல் இந்தியாவில் பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 11 மாநில மொழிகளில் கற்பிக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அனுமதி அளித்துள்ளது. பொறியியல் படிப்புகளை மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து இளநிலை மாணவர்களுக்கு பாடப்புத்தகம் எழுதும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொறியியல் பட்டப்படிப்பு, தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல், சிவில் ஆகிய படிப்புகள் தமிழில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள், பொறியியல் சேர்ந்தால் ஆங்கிலத்தில் படிக்க நேரும் என்பதால், இந்தப் பட்டப்படிப்பில் பெரும்பாலான மாணவர்கள் தொடர்ந்து படிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
தாய்மொழியில் பொறியியல் பாடங்கள்
தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம், பஞ்சாபி, ஒடியா, பெங்காலி, அசாமி உள்ளிட்ட 11 மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பயிலலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காகப் பாடப்புத்தகங்களை மாநில மொழிகளில் எழுதும் பணிகளை பல்கலைக்கழகங்களுக்கு வழங்கியுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இருந்துவந்த பாடங்கள் தாய்மொழியிலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.