டெல்லி: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சதமடித்த நிலையில், கடந்த மூன்று வாரங்களாக விலை சீராக உள்ளது. 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை விலையை திருத்துவதைத் நிறுத்தியுள்ளன. அதன்படி, சனிக்கிழமை (மார்ச் 20) தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .91.17 ஆகவும், டீசல் ரூ .81.47 ஆகவும் தொடர்கிறது.
கடந்த மூன்று வாரங்களாக நாடு முழுவதும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாமல் உள்ளது. எனினும், நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டிய பெட்ரோல் விலை குறையவில்லை.
இந்நிலையில், மாநில- மத்திய அரசு வரிகளை குறைப்பது தொடர்பாக இணையமைச்சர் அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளித்தார். எரிபொருள் விலையை பொருத்தமட்டில் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து, கச்சா ஒரு பீப்பாய்க்கு 7 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த ஆறு நாள்களாக கச்சா விலை சரிந்துள்ளது. தற்போதைய நிலையில் ஒரு பீப்பாய் 64.5 அமெரிக்க டாலராக உள்ளது.
இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலைகள் 26 மடங்கு அதிகரித்துள்ளன. அதன்படி இரண்டு வாகன எரிபொருள்கள் முறையே லிட்டருக்கு ரூ.7.46 மற்றும் ரூ.7.60 அதிகரித்துள்ளன. இதற்கிடையில், பல்வேறு மாநிலத் தேர்தல்களுக்கு பின்னர் தினசரி திருத்தம் தொடங்கியவுடன், சில்லறை விலைகள் மீண்டும் உயரக்கூடும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அலுவலர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடைசியாக பிப்ரவரி 27 அன்று திருத்தப்பட்டன. அதற்கு முந்தைய தினம் தலைமை தேர்தல் ஆணையம் அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலை அறிவித்தன. வாக்குப்பதிவின் இறுதி கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியும் நடைபெறும். அன்றை தினம் மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.