டெல்லி: 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய விவசாய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. உணவு மானியத்தில் 30 சதவீதம் செலவினத்தைக் குறைக்கும் பொருட்டு, கரோனா கால இலவச உணவு தானியத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான உர மானியம் 20 சதவீதத்திற்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உரம் வாங்க விவசாயிகள் அதிகப் பணம் செலவழிக்கும் நிலை உருவாகக் கூடும். அதேநேரத்தில், வேளாண் கடன் வழங்குவதற்கான இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை, பால்வளம், மீன்வளத்துறைகளை ஊக்குவிக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் கடன் திட்டத்தில் இணைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தோட்டப் பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஆரோக்கியமான நடவுப்பொருட்கள் மற்றும் கருவிகள் வழங்க 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், சிறு குறு வியாபாரிகள் பயன்படும் வகையில் மீன் வளத்துறைக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ள நிலையில் சிறுதானியம் பயிரிடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக ’ஸ்ரீ அண்ணா என்ற சிறுதானியங்களுக்கான உலகளாவிய மையம் உருவாக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹகர் சே சம்ரித்தி திட்டத்தின்கீழ் இதுவரை 63 ஆயிரம் வேளாண்மைக் கடன் சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்காக 2 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிப்பு!