டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதன்கிழமை (ஜூன் 9) தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து மத்திய அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்நிலையில், கடைசியாக ஜனவரி 22 அன்று தடுப்புகளை உடைத்து விவசாயிகளின் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையில் இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து தீர்வுகளைக் காண ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், “நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் வேளாண் சட்டங்களைக் கொண்டுவர விரும்பின, ஆனால் அவற்றை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அவர்கள் கொண்டுவர முடியவில்லை.
நரேந்திர மோடி அரசாங்கம் விவசாயிகளின் நலனுக்காக இந்த பெரிய நடவடிக்கையை எடுத்து சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. விவசாயிகள் அதன் பலன்களைப் பெற்றனர். இந்நிலையில் சட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆகையால், இந்தச் சட்டங்கள் தவறானவை என விவசாயிகள் கருதுகின்றனர். இது தொடர்பான முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” என்றார்.
மேலும், “விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு வேளாண் அமைச்சகம் தயாராக உள்ளது” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.72 அதிகரிப்பு!