ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் எம்ஜி சாலையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு ஒரு தம்பதி நேற்றிரவு (பிப்.12) நகை வாங்க வந்துள்ளனர். இவர்கள் பணியாளர்களிடம் பல்வேறு டிசைன்களில் தங்கச் சங்கிலிகளை எடுத்து காட்டச்சொல்லி பார்த்துள்ளனர். அரை மணி நேரத்துக்குப்பின் எந்த நகையையும் வாங்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதனிடையே ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மாயமானதை பணியாளர்கள் அறிந்துள்ளனர். இதை மேலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதனடிப்படையில் மேலாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துபார்த்தார். அப்போது, நகை வாங்காமல் சென்ற தம்பதி தங்கச் சங்கிலியை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
அந்த காட்சியில், பெண் தனது கையில் எடுத்த சங்கிலியை மடியில் உள்ள கைப்பையில் கண்ணிமைக்கும் நேரத்தில் போட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலாளர் சிசிடிவி ஹார்ட் டிஸ்கை கையோடு எடுத்து சென்று, ஆக்ரா போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த தம்பதியை தீவிரமாக தேடிவருகின்றனர். இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் மதுகர் கக்கர் கூறுகையில், "இருவரும் வெவ்வேறு டிசைன்களிலும், விலைகளிலும் நகைகளை காட்டச்சொல்லி விற்பனையாளரின் கவனத்தை திசை திருப்பி தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர். இதேபோல பலர் திருட முயற்சித்துள்ளனர். ஆனால், மாட்டிக்கொள்வார்கள். இவர்கள் மிகவும் நூதமாக திருடி சென்றுள்ளனர். போலீசார் விரைவில் அவர்களை கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'எனக்கும் பசிக்கும்ல.?' கடையை உடைத்து பொருளை சாப்பிட்ட படையப்பா யானை