டெல்லி: அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர விரும்புவோருக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து இந்திய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், " அக்னிபத் திட்டம் கடந்த 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவோர் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே சேவையாற்ற முடியும். இத்திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்வதற்கான வயதுவரம்பு 17.5 வயது முதல் 21 வயது வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த வயது வரம்பு 23ஆக அதிகரிக்கப்பட்டது.
அக்னிபத் திட்டத்தில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும்போது, 18 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் விண்ணப்பத்தில் கையொப்பமிட வேண்டும்.
அக்னி வீரர்களுக்கான பிரத்யேக ரேங்க் உருவாக்கப்படும், அது தற்போதுள்ள ராணுவ ரேங்க்குகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். அக்னி வீரர்கள் எந்த படைப்பிரிவுக்கு வேண்டுமானாலும் அனுப்பப்படலாம். அக்னி வீரர்கள் சேவையாற்றும் 4 ஆண்டுகளில் அவர்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு ரகசியத் தகவலையும் வெளியிடத் தடை விதிக்கப்படும்.
இனிவரும் காலங்களில் ராணுவத்தில் நிரந்தரப் பணியில் சேர விரும்பும் அனைவரும், அக்னி வீரர்களாக பணியாற்றியிருப்பது அவசியம். ராணுவத்தின் மருத்துவத்துறையில் பணிபுரியும் தொழில்நுட்பப்பிரிவினருக்கு மட்டும் இந்த நிபந்தனை இல்லை.
நான்கு ஆண்டுகள் சேவையை முடிப்பதற்கு முன்னதாக, சொந்த விருப்பத்தின் பேரில் வீரர்கள் சேவையிலிருந்து வெளியேற அனுமதி இல்லை. மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்க முடியும். அக்னி வீரர்களுக்கு ராணுவ உடையில் தனித்துவமான அடையாளங்கள் இடம்பெறும்.
நான்கு ஆண்டுகள் சேவை முடித்த அக்னி வீரர்கள் அனைவருக்கும், அவர்களது செயல்திறன் மற்றும் ராணுவத்தில் உள்ள தேவையை பொருத்து ராணுவத்தில் நிரந்தரமான பணிக்கு சேர வாய்ப்பு அளிக்கப்படும். ஒவ்வொரு பேட்ஜிலும் 25 விழுக்காடு வீரர்கள் மட்டுமே நிரந்தரப் பணிக்கு சேர அனுமதிக்கப்படுவர். அவ்வாறு சேர்பவர்கள் நிச்சயமாக 15 ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும். அக்னி வீரர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்கப்படும். மருத்துவத் தேவைக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி விடுப்பு அளிக்கப்படும்.
அக்னி வீரர்களின் மாத ஊதியத்திலிருந்து 30 விழுக்காடு வைப்பு நிதியாக பிடித்தம் செய்யப்படும். அதே அளவிலான தொகை அரசாங்கத்தால் செலுத்தப்படும். பதவிக்காலம் முடிந்ததும் இரு தொகையும், அதற்கான வட்டியுடன் வீரர்களுக்கு வழங்கப்படும். அக்னி வீரர்கள் 4 ஆண்டுகள் முடிவதற்கு முன்பே வெளியேற விரும்பினால், அரசாங்கத்தின் பங்களிப்புத்தொகை வழங்கப்படாது. வீரர்களின் வைப்பு நிதி மட்டுமே வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாரத பந்த்- அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ; 80 ரயில் சேவைகள் ரத்து