டெல்லி: அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தொலைதூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அக்னி 5 ஏவுகணை, ஒடிசா மாநிலம் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து நள்ளிரவில் வெற்றிகரமாக ஏவிப் பரிசோதிக்கப்பட்டது. அனைத்து ரேடார்கள், மின் ஒளியியல் சுவடு பற்றிச் செல்லும் நிலையங்கள், தொலை தூரத் தொடர்பு நிலையங்கள், ஏவுகணையின் விசை வீச்சு வளைவை அதன் பாதையில் செலுத்தின. ஏவுகணையின் அனைத்து நோக்கங்களும் இந்த பரிசோதனையில் எட்டப்பட்டன என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை 5,500 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணையில் அதிநவீன புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டுகளில் தயாரிக்கப்பட்டதைவிட இலகுவாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 5,500 கிமீ வரை 1.5 டன் எடையுடன் பயணிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறைந்த எடை கொண்டிருந்தால் 8,000 கிமீ தூரம் வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடியது.
இந்த ஏவுகணை இன்டர்-கான்டினென்டல் பாலிஸ்டிக் ஏவுகணை (ICBM) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் எல்லை பகுதியில் இந்தியா சீனா பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே அக்னி-5 ஏவுகணை சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஓராண்டில் இருமுறை தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு... காரணம் இதுதான்