பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதில், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. எனவே, கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் எனக் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல், கட்சியின் வீழ்ச்சியை உணர வேண்டும். கட்சியை மீட்டுருவாக்கம் செய்ய அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தேவை எனக் கூறினார்.
இதற்குப் பதிலளித்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், "தேர்தல் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், அனைத்து காலக்கட்டத்திலும் ஒற்றுமையாகவே இருந்துள்ளோம். கட்சித் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எனவேதான், அனைத்து இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும், வலிமையாக கடந்துவந்துள்ளோம்.
கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து ஊடகத்தில் கபில் சிபல் பேசிவருவது அவசியமற்றது. நாடு முழுவதும் உள்ள தொண்டர்களின் மனத்தை இது புண்படுத்தும். நாட்டை ஒற்றுமையாக்கி நிலையான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். பல பிரச்சினைகளைச் சந்தித்த பிறகே 2004ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றது. இதனையும் கடந்து செல்வோம்" என்றார்.
காங்கிரஸ் தலைமையின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி கட்சியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.