மும்பை: மகாராஷ்டிர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே இன்று (ஜூன் 30) மாலை 7.30 மணியளவில் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியினைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து போர்க்கொடி தூக்கியவர்.
உத்தவ் தாக்கரே நேற்று மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிருப்தி சிவசேனாவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக மாநிலத்தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருவரும் சந்தித்துப் பேசி இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
பாஜக மாநிலத் தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார். அதற்கான பதவியேற்பு நிகழ்வானது மாலை 7:30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.