டெல்லி: டெல்லியில் நெப் சராய் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று ஆப்பிரிக்கர்களை டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், நேற்று(ஜன.7) நெப் சராய் பகுதியில் விசா முடிந்த பின்பும் தங்கியிருந்த மூன்று நைஜீரியர்களை கைது செய்வதற்காக போலீசார் சென்றனர்.
அவர்களை கைது செய்து அழைத்து வந்தபோது, திடீரென அப்பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்கள் போலீசாரை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரை தாக்கி, கைதான நைஜீரியர்களை தப்பிக்க வைக்க முயன்றனர். அப்போது இரண்டு பேர் தப்பியோடிவிட்டனர். ஒருவரை மட்டும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மாலையில் போலீசார் மீண்டும் அப்பகுதிக்குச் சென்று, சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெண் உள்பட மேலும் 4 ஆப்பிரிக்கர்களை கைது செய்தனர். அப்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்கள் போலீசாரை முற்றுகையிட்டு தடுக்க முயன்றனர். ஆனால், போலீசார் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கைதானவர்களின் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஜோஷிமத் நில அதிர்வு - பிரதமரின் முதன்மைச் செயலாளர் உயர்மட்ட ஆலோசனை