நாகோன்: அஸ்ஸாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த சஃபிகுல் இஸ்லாம் என்பவர் விசாரணைக்காக படத்ரவா காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் அவர் நேற்று (மே 21) உயிரிழந்தார். காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதாலேயே சஃபிகுல் உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் படத்ரவா காவல் நிலையம்முன், ஒரு கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டு காவல் நிலையத்திற்குத் தீ வைத்தது. இதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், காவல் நிலையத்திற்குத் தீ வைத்து தாக்குதலில் ஈடுபட்டதாக ஐந்து குடும்பங்களின் வீடுகளை இடித்து நாகோன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா கூறுகையில், "சஃபிகுல் இஸ்லாம் உயிரிழந்தது தொடர்பாக நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக, படத்ரவா காவல் நிலைய பொறுப்பு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெறும். குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு கும்பல் முன்கூட்டியே திட்டமிட்டு காவல் நிலையத்திற்கு தீ வைத்துள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கோப்புகள், ஆதாரங்கள், சான்றுகள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் தொடர்பாக மூன்று நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த சமூகவிரோத செயல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளைஞர் உயிரிழப்பு: காவல் நிலையத்திற்கு தீ வைத்த கும்பல்