டெல்லி: குடியரசு தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், 'பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாவும் பன்வாரிலால் புரோஹித் கூடுதல் பொறுப்பு வகிப்பார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு ஆளுநராக 2017ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவருகிறார்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித், அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாக்பூர் (மகாராஷ்டிரா) சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட புரோஹித், 1980ஆம் ஆண்டில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும், 1982ஆம் ஆண்டில் குடிசை மேம்பாடு மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
அசாம் - தமிழ்நாடு - பஞ்சாப்
பின்னர் மக்களவை உறுப்பினரான பன்வாரிலால் புரோஹித், பாஜக, காங்கிரஸ் என பலமுறை கட்சி மாறியுள்ளார். இதற்கிடையே 2003ஆம் ஆண்டில் தனிக்கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித்தை, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக குடியரசு தலைவர் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நீட், வேளாண் சட்டம் ரத்து, தமிழுக்கு முன்னுரிமை, நிதித் துறை குழு' - ஆளுநர் உரை