தமிழில் 'தீனா', 'சமஸ்தானம்', 'ஐ', 'தமிழரசன்' போன்ற படங்களில் நடித்திருந்தவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. பாஜக உறுப்பினராக இருக்கும் இவர் நடிகராக மட்டுமல்லாது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
மேலும் 2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவைத் தேர்தல், கேரளாவில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டார்.
தற்போது சுரேஷ் கோபி கேரள மாநில பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநில பாஜகவின் தலைவராக இருந்த கே.சுரேந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரை பாஜக மேலிடம் நீக்கியுள்ளது.
சுரேந்திரன் மீது தேர்தல் வழக்கு, பண பரிவர்த்தனை மோசடி, அவதூறு ஆடியோ கிளிப் போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே சுரேந்திரனை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கேரள பாஜகவின் முன்னாள் அமைப்புச் செயலாளர் பி.பி. முகுந்தன் குரல் எழுப்பினார்.
இதனையடுத்தே சுரேந்திரனை தலைவர் பதிவியிலிருந்து பாஜக நீக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுரேஷ் கோபி வரும் நாள்களில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் சந்திக்கிறார்.
இந்தச் சந்திப்புக்கு பின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கேரள பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுரேஷ் கோபி, நடிகராக இருப்பதால் அவருக்கு தலைவர் பதவி எளிதாக கிடைக்கும் என பாஜக கட்சியினரே முணுமுணுக்கின்றனர்.
அவர் பாஜக உறுப்பினராக இருந்தாலும் பாஜகவினர் மட்டுமின்றி மற்ற தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் நபராக இருக்கிறார். ரசிகர்களின் ஆதரவு, சமீபத்தில் 'லவ் ஜிகாத்', 'போதை ஜிகாத்'துக்கு எதிராக கிறிஸ்தவ சர்ச் பாதர்களின் பேச்சுக்கு சுரேஷ் கோபி ஆதரவு தெரிவித்தார். இதனால் கிறிஸ்தவ மக்களிடமும் சுரேஷ் கோபி இணைக்கமாக உள்ளார்.
ஒருவேளை சுரேஷ் கோபி புதிய தலைவராக பெறுப்பேற்றுக்கொண்டால் வரும் காலங்களில் கேரளாவில் பாஜக தனி கவனத்தை பெறும் என கருதப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தலில் கறுப்பு பணம்- நடிகர் சுரேஷ் கோபிக்கு சிக்கல்!