தர்பங்கா: முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேற்று(அக்.5) மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்த அந்த நபர், மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.
மேலும், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை பிகார் மாநிலம் தர்பங்காவில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை மும்பை அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராகேஷ் குமார் மிஸ்ரா என தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் முகேஷ் அம்பானிக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, இதே ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசி அழைப்பு மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் மும்பை இல்லத்திற்கு வெளியே வெடிபொருட்கள் மற்றும் மிரட்டல் கடிதத்துடன் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில், மும்பை தெற்கு பகுதியில் உள்ள அம்பானியின் இல்லம் அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி சச்சின் வாசே உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது - உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!