சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறைகளில், கைதிகளுக்கென வானொலி நிலையங்களை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு அமைக்கப்படும் வானொலி நிலையங்களில், ரேடியோ ஜாக்கி, ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிடுவது, செய்தி வாசிப்பது என அனைத்தையும் சிறை கைதிகளே செய்யவுள்ளனர். இந்த திட்டத்தை, அம்மாநில காவல் துறையினர் மற்றும் டின்கா-டின்கா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து செயல்படுத்தவுள்ளனர்.
முதல்கட்டமாக பானிபட், ஆம்பலா, ஃபரிதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள சிறை கைதிகளுக்கு ரேடியோ ஜாக்கியாக பயிற்சியளிக்கப்பட்டு, பின்பு அவர்கள் சிறைகளிலுள்ள வானொலி நிலையங்களில் பணிபுரியத் தொடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய டின்கா டின்கா தொண்டு நிறுவனத்தின் தலைவர் வர்த்திகா நந்தா கூறுகையில், " ஐந்து பெண் கைதிகள் உட்பட மொத்தம் 21 சிறைக் கைதிகள், ரேடியோ ஜாக்கி, செய்தி வாசிப்பாளர் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில், இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆரோக்கியம், இசை, சட்டம் ஆகியவை சிறை வானொலி நிலையங்களின் முக்கிய அம்சமாக இருக்கும். கைதிகள் தங்களது சொந்த கதைகள், கவிதைகளை வானொலி நிலைய நிகழ்ச்சி வாயிலாகப் பகிர்ந்துகொள்ளலாம். கைதிகளின் விருப்பமான பாடல்கள் இங்கு ப்ளே செய்யப்படும். இந்த வானொலி நிலையங்களுக்கென சிறப்பு பாடல்கள் கைதிகளால் உருவாக்கப்படும்" என்றார்.
அம்மாநிலத்திலுள்ள லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லூரியில் உள்ள பத்திரிகைத் துறையின் தலைவராகவும் பணியாற்றி வரும் வர்த்திகா நந்தா, 2013ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து நாரி சக்தி புரஷ்கார் என்ற விருதினைப் பெற்றார்.
இதையும் படிங்க: ம.பி. அமைச்சரவை விரிவாக்கம்: சிந்தியா ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி