புபனேஸ்வர்: கடந்த 1999ஆம் ஆண்டில் ஒடிசா கூட்டுப் பாலியல் வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளி 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மகாராஷ்டிர காவல்துறை உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், 1999ஆம் ஆண்டு நடந்த கூட்டுப் பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான விவேகானந்தா என்ற பிபின் பிஸ்வால் தலைமறைவானார். இவர் தனது பெயரை ஜலந்தர் ஸ்வின் என மாற்றிக்கொண்டு மும்பையை அடுத்த அம்பய் பள்ளத்தாக்கிற்கு அருகே லோனாவாலா என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார்.
அங்கிருப்பவர்களிடம் தனது சொந்த ஊர் நரன்பூர் எனவும், வேலை தேடி இங்கு வந்ததாகவும் கூறியுள்ளார். இதனை உண்மை என எண்ணிய அப்பகுதி மக்கள் அவரை அங்கு தங்க அனுமதித்தனர். பின்னர் அவர் ஜலந்தர் ஸ்வின் என்ற பெயருடன் பைப்களை பழுதுபார்க்கும் தொழிலை செய்து வந்துள்ளார். அங்கு அவருக்கு அதார் அட்டை, வங்கிக் கணக்கு எல்லாம் உள்ளது.
இருப்பினும், இவர் தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளார். இதையறிந்த ஒடிசா காவல்துறையினர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிர காவல்துறையைத் தொடர்பு கொண்டு குற்றவாளியை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இரு மாநில காவல்துறையினரும், பிபின் பிஸ்வால் குறித்த தகவல்களை திரட்டி வந்தனர்.
பின்னர், தன்னை காவல்துறையினர் நெருங்குவதை அறிந்த பிபின் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றார். இருப்பினும், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்து சிபிஐ-யிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து, 1999ஆம் ஆண்டு புபனேஸ்வரிலிருந்து பத்திரிகைத்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் கட்டக் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், குற்ற சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இருவர்களில் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.