டெல்லி: நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 10வது நாளின் பூஜ்ஜிய நேரத்தில், மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த இருவர், குப்பிகளில் இருந்து மஞ்சள் நிற புகையை வெளியேற்றினர். பின்னர், அவர்கள் உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டு, அவைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதேநேரம், நாடாளுமன்ற வளாகத்தில் நிறங்களிலான புகையை வெளிப்படுத்திய பெண் உள்பட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, இவர்களிடம் டெல்லி சிறப்பு காவல் பிரிவினர் விசாரணை நடத்தினர். இதனிடையே, மக்களவைச் செயலர் அனுப்பிய கடிதத்தின் பேரில் உயர்மட்ட விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் லலித் ஜா என்பவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் லலித் ஜா, சம்பவத்தன்று பயன்படுத்திய மொபைல் போன்களை ராஜஸ்தானில் வைத்து எரித்ததாக கூறியதன் அடிப்படையில், எரிந்த நிலையில் செல்போனின் உதிரி பாகங்களும் கண்டறியப்பட்டன. மேலும், இவருக்கு உடந்தையாக இருந்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரிடம் எதிர்கட்சிகள் தரப்பில் கோரப்பட்டது. அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக பலரும் ஒத்திவைப்பு தீர்மானங்களையும் தாக்கல் செய்தனர். இதனால் கடும் அமளியும் எதிர்கட்சியினரால் நிகழ்த்தப்பட்டது.
இதன் விளைவாக, நேற்று (டிச.18) காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் உள்பட இரு அவைகளிலும் சேர்ந்து 92 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று மீண்டும் கூடிய அவையில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் என்சிபியின் சுப்ரியா சுலே, சசி தரூர், கார்த்தி சிதம்பரம், சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், எஸ்டி ஹாசன், மனீஷ் திவாரி, டேனிஷ் அலி, ஃபரூக் அப்துல்லா, பிரிதம் சிங், எம்டி பைசல் மற்றும் சுதீப் பந்தோபதாய் உள்பட 49 மக்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, இதுவரை 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு பெருமளவிலான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பதாகைகள் ஏந்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் தொடர் அமளி - திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், விஜய் வசந்த் என 33 பேர் இடைநீக்கம்!