மறைந்த குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று (ஜூலை 27).
இந்தியாவின் மேன்மையை தனது வாழ்நாள் முழுவதும் கனவாகக் கொண்டிருந்த அவர், அக்கனவை எதிர்வரும் தலைமுறையினரான குழந்தைகளிடம் தொடர்ந்து விதைத்தார்.
பலருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த அப்துல் கலாமிற்கு, தனது வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை அளிக்கும் நூலாக இருந்தது திருக்குறள். கலாமிற்கு மிகவும் பிடித்த நூல்களுள் திருக்குறள் பிரதானமானது.
பல்வேறு உரைகளில் அவர் குறள்களை மேற்கொள்காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவற்றில் சிலவற்றை தனது மனதிற்கு மிகவும் நெருக்கமானவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஒரு விமானி ஆக வேண்டும் என்பது அப்துல் கலாமின் இளம்வயது கனவு. இந்திய விமானப் படையின் விமானி தேர்வுக்காக 1957ஆம் ஆண்டு அப்துல் கலாம் டேராடூன் செல்கிறார்.
போட்டியில் அப்துல் கலாமால் தேர்ச்சியடைய முடியவில்லை. மனச்சோர்வுடன் அப்துல் கலாம் திரும்புகையில் வழியில் ரிஷிகேஷில் உள்ள சிவானந்தா ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்குள்ள சாதுவிடம் தனது மனச் சோர்வைத் தெரிவிக்கிறார்.
அப்போது சாது, " மனதில் உள்ள தோல்லி மனப்பான்மைக்கு நீ முதலில் தோற்கடி" என்ற பொருள் தரும் கீதையில் உள்ள ஒரு சுலோகத்தை கூறுகிறார். இந்தச் சம்பவம் கலாமின் மனத்திலும் வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதன் பின்னர் இதேப்பொருள் தரும் திருக்குறளை தனது வாழ்நாள் முழுவதும் கைக்கொள்கிறார். அதுதான்
"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்." (623) என்ற குறள்.
துன்பத்தின் போது கலங்காத உள்ளம் படைத்தவர்கள், அந்தத் துன்பத்திற்கே துன்பம் கொடுப்பர் என்பதே அதன் பொருள்.
அறிவின் பயன் யாது?
மிகச்சிறந்த அறிவியல் உருவாக்கங்களை கலாம் மேற்கொண்டிருந்தாலும் அவருக்கு மிகவும் திருப்தி தந்த கண்டுபிடிப்பு ஒன்று உண்டு. அதை அவரே கூறியுள்ளார்.
அக்னி ஏவுகணையை விண்ணில் செலுத்த குறைந்த எடை கொண்ட மெட்டீரியலை அவர் ஆராய்கிறார். அப்போதுதான், காம்போசைட் மெட்டீரியல் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்குகிறார். இதன் மூலம் அந்தப் பொருளின் எடை 10 மடங்கு குறைகிறது.
தனது அறிவியல் கண்டுபிடிப்பை அத்தோடு விட்டுவிடாமல் துன்பத்தில் தவிப்போரின் வாழ்வியல் தேவைக்கும் அதை பயன்படுத்துகிறார்.
போலியோ பாதிப்பிற்குள்ளான குழந்தைகள் சுமார் நான்கு கிலோ எடை கொண்ட செயற்கைகால்களுடன் சிரமப்படுவதை அறிந்த கலாம், ஏவுகணைக்காக கண்டுபிடித்த குறைந்த எடை மெட்டீரியலை செயற்கை கால் தயாரிப்புக்கு பயன்படுத்த ஆலோசனை கூறி, குழந்தைகளின் சுமையை பத்து மடங்கு குறைக்கிறார்.
இந்தச் சம்பவத்தை குறிப்பிடும் கலாம், இதற்கான உந்துதலை குறளில் இருந்துதான் எடுத்துக்கொண்டேன் என்கிறார்.
"அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை" (315) என்ற குறள்தான் அது.
பிறரின் துன்பத்தை தன் துன்பமாக உணர்த்துவதே அறிவு. அதைவிட அறிவு தரும் பயன் வேறு என்ன இருந்துவிட முடியும் என்கிறது அந்தக் குறள்.
எண்ணம் போல் உயர்வு
வாழ்வின் இறுதி நொடி வரையிலும் மேன்மையை நோக்கியே கனவு கண்ட அப்துல் கலாம், அந்தக் கனவை நோக்கி தன்னுடன் சேர்த்த இளம் தலைமுறையினரையும் கொண்டு செல்ல தலைப்பட்டார்.
இந்த உயர்ந்த நோக்கங்கள் குறித்து சிந்தனையை அப்துல் கலாமின் மனதில் விதைத்த குறள் தான்
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து."(596)
எண்ணங்கள் எல்லாம் உயர்வாக இருந்தால், ஒரு வேளை அது கைகூடாவிட்டாலும் கைகூடியதாகவே கொள்ளப்படும் என்பதே இதன் பொருள்.
இதையும் படிங்க: இந்தியா வாரியணைத்துக்கொண்ட தமிழ்ப் புதல்வன் அப்துல் கலாம்