டெல்லி: இதுகுறித்து டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "தற்சார்பு இந்தியா திட்டம், இந்தியாவை உலகின் வலுவான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. இந்தியா தனது தேவைகளை குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான தேவைகளை நிறைவேற்ற எந்த நாட்டையும் சார்ந்திருப்பதில்லை. பாதுகாப்புத்துறையில் தற்சார்பை எட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான சாதனங்களின் பட்டியலில் 310 வகைகளை சேர்த்திருப்பதும், இதில் தனியார் துறையை ஊக்குவித்திருப்பதும் முக்கிய உதாரணங்கள்.
எதிர்கால சவால்கள் அனைத்தையும் கையாண்டு நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரித்து ஆயுதப்படைகளுக்கு வழங்குவதில் அரசு ஊசலாட்டம் இல்லாத உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் நீர், நிலம், ஆகாயம், விண்வெளி ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கான நவீன பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் திறன் உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு இருக்கும். இதற்குத் தேவையான சூழலை உருவாக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,900 கோடியாக இருந்த பாதுகாப்பு சாதனங்களின் ஏற்றுமதி தற்போது ரூ.13,000 கோடியை கடந்துள்ளது.
2025-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு சாதனங்களின் உற்பத்தி இலக்கான ரூ.1.75 லட்சம் கோடியை எட்ட முடியும். இதில், ரூ.35,000 கோடிக்கான ஏற்றுமதியும் அடங்கும். நாட்டின் முதலாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 76 சதவீத சாதனங்களுடன் தயாரிக்கப்பட்டது. தற்சார்பை அடைவதற்கான இந்தியாவின் பாதையில் இது ஒரு முக்கியமான மைல்கல். நாட்டில் ஏற்பட்டுள்ள அதிவேகமான வளர்ச்சிக்கு மக்களிடம் உள்ள ஒற்றுமையும், தேசபக்தியும், முக்கிய காரணங்களாக உள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹைதராபாத் விடுதலை தினத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா