டெல்லி: தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (பிப்.26) விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி கைது செய்யப்பட்டார்.
மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு ஆம் ஆத்மி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் டிவிட்டர் பக்கத்தில், "இன்றைய நாள் ஜனநாயகத்தின் கருப்பு நாள். பொய்யான வழக்கில் உலகின் சிறந்த கல்வி அமைச்சரை, பாஜக அரசின் சிபிஐ கைது செய்துள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கில் பாஜகை இதை செய்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சீவ் ஜா தனது டிவிட்டரில், "மணீஷ் சிசோடியாவின் கைது சர்வாதிகாரத்தை காட்டுகிறது. நாட்டின் சிறந்த கல்வி அமைச்சரை பிரதமர் மோடி கைது செய்திருப்பது நல்லதாக இல்லை. இந்த சர்வாதிகாரம் விரைவில் முடிவுக்கு வரும்" என கூறியுள்ளார்.
சிசோடியா கைது செய்யப்படலாம் என முன்பே கணித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும் சிறைக்கு செல்வது சாபம் இல்லை. அது பெருமையான விஷயம். சிறையில் இருந்து தாங்கள் விரைந்து வர இறைவனை பிரார்த்திக்கிறேன்" என டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஜம்முவில் இருந்து 388 பேர் விமானப்படை விமானத்தில் லே-வுக்கு பயணம்