டெல்லி: ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை நேற்றைய முன் தினம் (ஜூன் 2) இரவு ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, நேற்று (ஜூன் 3) பிற்பகலில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதாக் வெளியிட்டுள்ள வீடியோவில், “கடைசியாக நடைபெற்ற ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில், ரயில் பயணிகளின் மீதான கவனம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என நான் பரிந்துரை செய்தேன்.
ஆனால், அரசு முழுக்க முழுக்க விளம்பரப்படுத்துதலில் மட்டுமே கவனம் செலுத்தி உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மீது கவனம் செலுத்தவில்லை. மோதல் எதிர்ப்பு சாதங்கள் விபத்துக்களை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், இந்தியாவில் உள்ள 65 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிலான ரயில்வே வழித்தடத்தில், வெறும் 2 சதவீதம் மட்டுமே இந்த சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மோடி தலைமையிலான அரசு, கடந்த 9 வருடங்களில் 2 சதவீத ரயில்வேக்களில் மட்டுமே சாதனங்களைப் பொருத்தி உள்ளது. எனவே, இந்தியா முழுவதும் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர இன்னும் 400 வருடங்களுக்கு மேல் ஆகும். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இந்தியா முழுவதிலும் உள்ள 23 ஆயிரம் ரயில்களில், 65 ரயில்களில் மட்டுமே மோதல் எதிர்ப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது 0.2 சதவீதத்திற்கும் குறைவாகும்.
இதன் மூலம் மக்களின் பாதுகாப்பு அரசின் முன்னுரிமையில் இல்லை என்பது தெளிவாகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு அனைத்து ரயில்களிலும் மோதல் எதிர்ப்பு சாதனங்கள் பொருத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், எந்த வித தரவுகளும் கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளார். சந்தீப் பதாக் ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
மேலும், இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர் மட்ட விசாரணையானது, விபத்துக்கான காரணத்தை பொறுப்புடன் விசாரணை நடத்த வேண்டும். இந்திய ரயில்வேயை மத்திய அரசு முற்றிலும் அழித்து விட்டது. பயணிகளின் பாதுகாப்பு குறித்து சிந்திப்பது குறைந்து விட்டது. இதற்கு ரயில்வே அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்” என தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக பேசிய ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் ஜா, “இந்த விபத்துக்கு பிறகு, ரயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
முன்னதாக, கடந்த 1999ஆம் ஆண்டு அசாமில் நிகழ்ந்த காய்சால் ரயில் விபத்தில் 290 பேர் உயிரிழந்த பிறகு, அதற்கு பொறுப்பேற்ற எங்களது தலைவர் நிதீஷ் குமார், அப்போது பொறுப்பு வகித்த ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்