போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எட்டு வயதில் காணாமல் போன சிறுவன், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆதார் கார்டு உதவியால் பெற்றோரிடம் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமர்த் டாம்லே என்பவர் நாக்பூரில் அனாதை விடுதி நடத்தி வந்துள்ளார். அவரிடம் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே நிலையத்தில் தனியாக இருந்த சிறுவனை காவல் துறையினர் அழைத்து வந்துள்ளனர். அச்சிறுவனுக்கு மனநல பாதிக்கப்பட்டு, சரியாக பேச முடியாத நிலையில் இருந்துள்ளான். அவன் அம்மா அம்மா என மட்டுமே பேசிக் கொண்டிருந்ததால், டாம்லே அச்சிறுவனுக்கு ‘அமன்’ எனப் பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார்.
2005இல் அனாதை இல்லம் மூடப்பட்டதால், அமனை தனது வீட்டிற்கு டாம்லே அழைத்து வந்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர் போல் கவனித்து வந்துள்ளார்.
இதுமட்டுமின்றி அமனை பள்ளியில் சேர்த்தும் அழகு பார்த்துள்ளார். இந்தாண்டு, பத்தாம் வகுப்பில் அமன் சேர்வதால், ஆதார் கார்டு அவசியம் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமனுக்கு ஆதார் கார்டு எடுத்திட பயோமெட்ரிக் முயற்சிக்கும் போதுதான், ஏற்கனவே ஆதார் கார்டு பதிவு செய்யப்பட்டுள்ளது டாம்லேவுக்கு தெரியவந்துள்ளது. அதை ஆராய்கையில், அச்சிறுவனின் பெயர் முகமது அமீர் என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, அரசு அலுவலர்களின் உதவியுடன் அமீரின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவனை பத்திரமாக ஒப்படைத்தனர். வீட்டில் குடும்ப உறுப்பினராக இருந்த அமீரை பிரிவது கடினம் என்றாலும், உண்மையான பெற்றோரிடம் ஒப்படைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என டாம்லே தெரிவித்தார்.