தர்பங்கா(பிகார்): பட்டியலினத்தை சார்ந்த ஓர் நபர் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பிற சமூகத்தினரால் இரவு முழுவதும் கட்டி வைத்து தாக்கப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், பலத்த காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜோரா கிராமத்தைச் சார்ந்த ராம் பிரகாஷ் பஸ்வான் என்பவரை திருடியாதகக் கூறி கை, கால்களை கட்டி வைத்து கட்டைகளால் அடித்தது மட்டுமின்றி தாகத்திற்கு தண்ணீர் கேட்டதற்கு சிறுநீரைக் கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். இந்தக் காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதுகுறித்து அவரது மகள் பூஜா குமாரி தெரிவிக்கையில், “கடந்த ஆக.16ஆம் தேதி தனது தந்தை மதுபானியில் இருந்து அவரின் அத்தை வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது ஹிஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அவரை வழிமறித்து பின் பலரையும் அங்கு கூட்டி, தந்தையை இரவு முழுவதும் கை, கால்களை கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்து எங்கள் கிராமத்தினர் விரைந்த போது, 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் அவரை விடுவிப்போம் எனக் கூறினர். தந்தையின் நிலை மிக மோசமாக இருந்தமையால், அப்போது ஊர் மக்கள் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவரை மீட்டு வந்தனர்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து மதுபானி காவல்துறை ஏன் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என பஜ்ரங் தல் கட்சியின் தர்பங்கா மாவட்டச் செயலாளர் ராஜீவ் குமார் மதுகர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர் உண்மையிலேயே திருடிருந்தாலும், அதை சட்டரீதியாக அணுகாமல் அவரை அடிக்க யார் அனுமதி கொடுத்தது என்றும் கேட்டதுடன், பாதிக்கப்பட்ட ராம் பிரகாஷ் மதம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டது தான் மாற்று சமூகத்தினருக்கு பிரச்சனை என்றும், இதில் PFI அமைப்பினருக்கும் தொடர்புண்டு எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பஜ்ரங் தல் கையில் எடுக்குமெனவும் பஜ்ரங் தல் மாவட்ட செயலாளர் ராஜீவ் குமார் மதுகர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரெண்டான Aunty மீம்ஸ்.., தெலுங்கு நடிகை காவல் துறையில் புகார்...