கர்நாடகா மாநிலம், கர்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள குக்கிராமம், குட்டஹள்ளி. இந்தக் கிராமத்தை நகரத்துடன் இணைக்கும் சாலை வசதிகள் ஏதும் இல்லாத காரணத்தால், போக்குவரத்து வசதியுள்ள பிரதான சாலையை அடைய இப்பகுதியினர் கி.மீ கணக்கில் நடக்க வேண்டும். திடீரென யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவும் பாதையில்லை என்பதால் அப்பகுதியினரே தோளில் தூக்கிச் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இங்கிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமெனில் 8 கி.மீ., நடக்க வேண்டும் என்பது வேதனையின் உச்சம்.
இந்நிலையில் தான் கடந்த திங்கள்கிழமை அன்று (ஜன.4) மூதாட்டி ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அவரை 7 நபர்கள் குட்டஹள்ளி கிராமத்திலிருந்து கர்வாரில் உள்ள மருத்துவமனை வரை கிட்டத்தட்ட 8 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்றனர். இதற்கு சுமாராக மூன்று மணி நேரமாகியுள்ளது. நல்வாய்ப்பாக கடும் சிரமத்திற்கு மத்தியிலும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் மூதாட்டியின் உடல்நலம் தற்போது சீராக உள்ளது.
இது தொடர்பாக அக்கிராமவாசி ஒருவர், 'நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த 70 ஆண்டுகள் ஆனபோதும் கூட, எங்களிடம் அடிப்படை வசதிகள் இல்லை. யாருக்கேனும் உடல் நிலை சரியில்லாமல் போனால் தோள்களில் சுமந்தபடி மலைகளைக் கடந்து மருத்துவமனையை நோக்கி நடப்போம். பிரசவ வலியில் துடிக்கும் பெண்களை அழைத்துச் செல்வது மிகவும் சிரமம். ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் சாலை வசதி செய்து தரச் சொல்லிக் கேட்கிறோம். அவர்களுக்கு இந்த சின்ன கிராமத்தைக் குறித்து அக்கறை இல்லை' என்றார்.
ஒருவேளை குட்டஹள்ளி கிராமத்தில் சரியான சாலை அமைந்திருந்தால் மருத்துவமனைக்கு வாகனத்தில் செல்லலாம். அதுவும் வெறும் பத்து நிமிடங்களில்... அரசு இனியாவது ஆவண செய்ய வேண்டும் என்பது தான் அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த சிறுவன் உயிரிழப்பு