ஐதராபாத் : வந்தே பாரத் ரயிலை, மின்சார ரயில் என்ஜின் ஒன்று இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வந்தே பாரத் சிறப்பு ரயில் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தற்போது மற்றும் ஒரு வந்தே பாரத் ரயில் தொடர்புடைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
வந்தே பாரத் விரைவு ரயில் ஒன்றை மின்சார ரயில் என்ஜின் ஒன்று இழுத்துச் செல்லும் வீடியோ தான் அது. 25 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் பல்வேறு கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வந்தே பாரத் விரைவு ரயிலின் உண்மைத் தான் இந்த வீடியோவில் காணப்படும் நிலை என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர், தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து 70 ஆண்டு கால வரலாறு 9 ஆண்டுகளின் பொய்களை பறிப்பதாக பதிவிட்டு உள்ளார். வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இது குறித்து ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.
வைரல் வீடியோ தொடர்பாக மத்திய கிழக்கு ரயில்வே கூறுகையில், மின்சார ரயில் என்ஜின் இழுத்துச் செல்லும் வந்தே பாரத் ரயில் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், அந்த ரயிலுக்கான போக்குவரத்து வழித்தடம், ஓட்டுநர், பணியாளர்கள் என யாரும் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷஷாங்க் ஜெய்ஸ்வால் என்பவர், சகல்திஹா ரயில் நிலையம் அருகே இந்த வீடியோவை பதிவு செய்ததாகவும், அந்த வீடியோவை பதிவிடும் போது அவரே அதற்கு உரிய காரணத்தை தெரிவித்து உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இயக்கப்படாத வந்தே பாரத் ரயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து சென்னை ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலையில் இருந்து பாட்னா நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.
பாட்னா நோக்கி கொண்டு செல்லப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணிகள் யாரும் இல்லை என்றும், இணையத்தில் பதிவிடப்பட்ட வீடியோ சிலர் எடுத்து தவறாக சித்தரிக்கும் வகையில் கருத்து பதிவிட்டு பகிர்ந்து வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : புல்தானா பேருந்து விபத்து... டயர் வெடித்து விபத்தா? அதிவேகம் காரணமா? ஆர்டிஒ அறிக்கை கூறுவது என்ன?