டெல்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய பாஜக அரசு, ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை ஒரே வழக்காக உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் திங்கள், வெள்ளிக்கிழமை தவிர நாள்தோறும் விசாரணை நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். அதன்படி, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 12வது நாளாக இன்று (ஆகஸ்ட் 29) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்றும், காஷ்மீரும், லடாக்கும் யூனியன் பிரதேசங்களாக நிரந்தரமாக நீடிக்க முடியாது என்றும் கூறினார்.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது நிரந்தரமானது அல்ல. மத்திய அரசின் நிலைப்பாடும் இதுதான்" என்றார்.
அப்போது தலைமை நீதிபதி, மாநிலமாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஏதேனும் காலக்கெடு வைத்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு துஷார் மேத்தா, அங்கு இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி, "ஒரு சில தீவிரமான சூழ்நிலைகளில் மாநிலம் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. மீண்டும் அது மாநிலமாக மாற வேண்டும்" என்றார். மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்குவது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த விசாரணையின்போது தலைமை நீதிபதி சந்திரசூட், இந்திய அரசியலமைப்புப் பிரிவு 35A, நாட்டு மக்களின் பல அடிப்படை உரிமைகளைப் பறித்தது என்றும், வேலைவாய்ப்பு மற்றும் சொத்து வாங்குவதற்கான உரிமைகள் ஜம்மு காஷ்மீரில் வசிக்காத மக்களிடமிருந்து பறிக்கப்பட்டன என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சதி தொடர்பாக இருவர் கைது!