ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில், தாய்லாந்து மாணவி ஒருவரை பல்கலைக்கழக பேராசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை உணர்ந்த அம்மாணவி, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட பேராசிரியர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு ஏபிவிபி மாணவர்கள் பேராசிரியருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கச்சிபெளலி காவல் துறையினர், பேராசிரியர் மீது 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் காவலில் உள்ள பேராசிரியரிடம் விசாரணை மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம் ஆகியவற்றை பதிவு செய்த பிறகு, மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கச்சிபெளலி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் நர்சிங் மாணவி கூட்டுபாலியல் வன்புணர்வு