பத்தனம்திட்டா : கேரள மாநிலம் சபரிமலைக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் பெயர் மேகநாதன் (வயது 45) என்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்து உள்ளதாகவும் கேரள போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பம்பை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட மேகநாதன் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மேகநாதனை அழைத்து காவலர் பேருந்தில் ஏற்றி உள்ளனர். சிறிது நேரத்தில் பேருந்து விட்டு வெளியேறிய மேகநாதன், அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்டோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேகநாதனை காப்பாற்ற தீயணைப்பு துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டதாகவும், இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கேரள போலீசார் தெரிவித்து உள்ளனர். என்ன காரணத்திற்காக மேகநாதன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.
தற்கொலை செய்து கொண்ட மேகநாதனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மன நலன் பாதித்தவர் போல் மேகநாதனின் நடவடிக்கைகள் இருந்ததாகவும், அதனால் அவரை போலீசார் பேருந்துக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் கூறினர். இருப்பினும் பேருந்தை விட்டு திடீரென வெளியேறிய அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் என்ன காரணத்திற்காக மேகநாதன் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : KKR VS SRH : கொல்கத்தாவின் போராட்டம் வீண் - வீறு நடைபோடும் ஐதராபாத்!