மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாத இறுதியில் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை ஏலம் விட்டிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது. நாந்தேடு மாவட்டம் மகாதி, முட்கேட் ஆகிய கிராமங்களில் ஊராட்சி மன்றங்களின் பொறுப்புகள் ஏறத்தாழ 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74 திருத்தச் சட்டங்களும், 11 மற்றும் 12 அட்டவணைகளும் இந்தியக் குடிமக்களுக்கு அளித்திருக்கிற உள்ளாட்சி அதிகாரங்களை ஊர்கூடி விலைபேசுவது சட்ட விரோதம் என்பதைக் கூட உணராமல் இந்த ஜனநாயக விரோத செயல் அங்கே அறங்கேறியுள்ளது.
நவம்பர் 21ஆம் தேதி இரவு 8 மணியளவில் மகாதி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் கூடிய கிராம மக்கள் கூட்டத்தில், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் விலை பேசலாம் என ஏலத்தை நடத்தியுள்ளனர். ஒன்பது லட்சம் ரூபாயில் தொடங்கிய இந்த ஏலம் கடைசியாக ரூ. 10 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோதாவரி ஆற்றங் கரையில் அமைந்துள்ள மகாதி கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலான செங்கல் சூளைகளும், மணல் குவாரிகளும் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வருகின்றன. அவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பார்க்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாகவே, இந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத்தின் (கிராம பஞ்சாயத்து) அலுவலக பொறுப்புக்கு இத்தனை போட்டி ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் தாசில்தார் தினேஷ் ஜம்பிள்ஸ் பேசியபோது, “எனக்கு இன்னும் புகார் இல்லை என்று தாசில்தார் தினேஷ் ஜம்பிள்ஸ் கூறுகிறார் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது, ஆனால் கிராமவாசிகளிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ இதுவரை இது தொடர்பாக எனக்கு எந்த புகாரும் வரவில்லை.
இது தொடர்பாக ஏதேனும் புகார் அளிக்கப்பட்டால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஏலம் விடப்பட்டதாக கூறப்படும் ஊராட்சி தலைவர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாயத்து பதவிகளை ஏலம்விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஏலம் குறித்து கிராமவாசியைக் கேட்டபோது, “ஏலம் விடப்பட்டது உண்மைதான். கிராம மக்கள் விரும்பியே ஏலம் விடப்பட்டது. இந்த முயற்சியில் இருந்து திரட்டப்படும் பணம் கிராமப் பள்ளியில் டிஜிட்டல் அறைகள் கட்ட பயன்படுத்தப்படும். எனவே பள்ளியை மேம்படுத்த அந்த பணம் பயன்படுத்தப்படும். ஏலம் காரணமாக கிராமத் தேர்தல்கள் போட்டியின்றி அமைதியாக நடைபெறும். கிராம துணைத் தலைவர் பதவி ஓ.பி.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல்களுக்கு செலவழிப்பதற்கு பதிலாக, கிராம பள்ளிகளை புதுப்பிக்கவும் டிஜிட்டல் மயமாக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
எனவே, ஏலம் ஏகமனதாக கிராமவாசிகள் நடத்தினர். ஆனால் அந்த வீடியோ வைரலாகிவிட்டதால், தலைப்பு கிராமத்திற்கு வெளியே பரவியது. இது சட்டத்தின் கட்டமைப்பிற்கு பொருந்தாது. ஏலம் ஒரு சமூக கண்ணோட்டத்துடன் நடத்தப்பட்டிருக்கலாம்”என்றார்.
இதையும் படிங்க : ”இவர்தான் புதிய ஜின்னாவா...” - விமர்சித்த பாஜக இளைஞரணித் தலைவர்