திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வரும் பிரதீஷ்(48) கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிகிச்சை அளிக்க கல்லீரல் தானம் பெற வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு பணம் இல்லாததால் மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார், பிரதீஷ்.
இந்தச் சூழலில் பிரதீஷின் 17 வயது மகள் தேவானந்தா, தனது தந்தைக்காக கல்லீரல் தானம் செய்ய விரும்பினார். ஆனால், மருத்துவ விதிகளின்படி 18 வயது நிரம்பாத சிறார்கள் உடல் உறுப்பை தானம் செய்ய அனுமதி இல்லை. அதேநேரம் தந்தை பிரதீஷும் சிறுமியின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அப்போதும் சிறுமி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து, தந்தைக்கு கல்லீரம் தானம் செய்ய அனுமதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார். உடல் ரீதியாக தான் தானம் செய்வது சாத்தியம் என்பது தொடர்பான மருத்துவ அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சிறுமி கல்லீரல் தானம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக தந்தையும் மகளும் காத்திருக்கின்றனர். தனது தந்தைக்காக கல்லீரல் தானம் செய்வதை தியாகமாக கருதவில்லை என்றும், இது தனது தந்தைக்கு தான் செய்யும் குறைந்தபட்ச சேவை என்றும் சிறுமி தேவானந்தா கூறினார்.
இந்த சம்பவத்தின் மூலம் நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்யும் முதல் சிறுமி என்ற பெருமையை தேவானந்தா பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் இளம்பெண்களுக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை!