டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்து சர்ச்சையை கிளப்பிய சங்கர் மிஸ்ரா என்பவர் பெங்களூருவில் இன்று (ஜனவரி 7) கைது செய்யப்பட்டார். பெங்களூருவின் சஞ்சய் நகரில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் பதுங்கியிருந்த மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வழங்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து நவம்பர் 26ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு வந்தடைந்தது. இதனிடையே விமானத்தில் பயணித்த வயதான பெண் மீது மதுபோதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சளுக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட பெண் டாடா குழும தலைவர் சந்திரசேகரனுக்கு புகார் கடிதம் அனுப்பினார்.
இதற்கு ஏர் இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட ஆண் பயணியை கண்டறிந்துள்ளோம். அவரது பெயரை நோ ஃபிளை லிட்ஸ்டில் (no fly list) சேர்க்க முடிவெடுத்துள்ளோம். அதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பிவிட்டோம். அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண் பயணி அனுப்பியிருந்த கடித்தத்தில், நியூயார்க்-டெல்லி விமானத்தில் என் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் எனக்கு மிகுந்த மனஉளைச்சலை அளித்தது. அந்த சம்பவத்தின்போது எனக்காக நான் மட்டுமே வாதாடினேன். விமான குழுவினர் எனக்காக ஆதரவளிக்கவில்லை. சக பயணிகளில் ஒருவர் எனக்காக குரல் கொடுத்தப்போதுதான் அந்த நபர் அங்கிருந்து நகர்ந்தார்.
அதோடு எனக்கு பாதுகாப்பையோ அல்லது மாற்று வசதியையோ விமான நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. எனது இருக்கை காயும் வரை பணி பெண்கள் இருக்கையில் அமர்ந்தேன். அதன் பின்பு மீண்டும் எனது இருக்கைக்கே திரும்பும்படி பணிப்பெண்கள் கூறினர். பாதிக்கப்பட்ட பயணியை கவனிப்பதில் பணிப்பெண்களுக்கும், நிறுவனத்துக்கும் உடன்பாடு இருப்பதாக தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்த பயணியை டெல்லி போலீசார் அடையாளம் கண்டனர். அவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவானார். இந்த நிலையில், பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: தேனீக்கள் தாக்கியதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 குதிரைகள் உயிரிழப்பு