விசாகப்பட்டினம்: ஒடிசா மாநிலம் கோராபுத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சமுலு - ஈது குரு தம்பதி. கடந்த சில காலமாக ஈது குரு நோய்வாய்ப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தம்பதி இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒரு வேலையாக சென்றுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் ஈது குருவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், விசாகபட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அங்கு தொடர் சிகிச்சைக்கு பிறகும் உடல் நிலை தேராததால் ஈது குருவை டிஸ்சார்ஜ் செய்த சமுலு, அங்கிருந்து விஜயநகரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
விஜயநகரத்திற்கு ஆட்டோவில் சமுலு மற்றும் ஈது குரு சென்றுள்ளனர். ராமாவரம் பாலத்திற்கு அருகில் ஆட்டோ சென்ற போது, ஈது குருவுக்கு உடல் நிலை மோசமாகி உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. திடீரென ஈது குரு உயிரிழந்ததால் பதறிய ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் அங்கேயே இறக்கிவிட்டுத் தப்பியுள்ளார்.
இறந்த மனைவியை ஆம்புலன்சில் கொண்டு செல்ல முயன்ற சமுலு, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், தெலுங்கு தெரியாத காரணத்தால் அங்கிருந்த மக்களுடன் பேச முடியாமல் திணறிய சமுலு, செய்வதறியாது விழிபிதுங்கி நின்றுள்ளார். மனைவியின் சடலத்தைத் தோளில் சுமந்து கொண்டு சமுலு நெடுஞ்சாலையில் நடக்கத் துவங்கி உள்ளார்.
பெண்ணை தோளில் தூக்கிக் கொண்டு ஆண் செல்வதைக் கண்டு சந்தேகித்த அக்கம்பக்கத்து மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சமுலுவை மறித்து விசாரணை நடத்தி உள்ளனர். நடந்த விவரங்கள் அனைத்தையும் சமுலு கூறிய நிலையில், மருத்துவ சான்றுகளை சரிபார்த்த பிறகு உறுதி செய்த போலீசார் சமுலுவுக்கு ஆறுதல் கூறியதோடு உணவு வழங்கி, ஒடிசா செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்துக்கொடுத்தனர்.
இதையும் படிங்க: kakinada tragedy: எண்ணெய் டேங்கர் சுத்தம் செய்தபோது 7 தொழிலாளர்கள் பலி!