ஜாம்நகர் (குஜராத்): மத்திய பிரதேச மாநிலம் தேவ்புரா பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், குஜராத் மாநிலம் ஜாம்நகர் அருகே உள்ள தமாச்சன் கிராமத்தில் வேளாண் தொழில் செய்து வந்தனர். விவசாய நிலத்தில் 200 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் விழுந்து தான், 2 வயது குழந்தை இறந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், நேற்று (ஜூன் 3) காலை 9.30 மணியளவில் குழந்தை ரோஷினி (2) வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையை மீட்க அவர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அதற்குள் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். பின்னர் ராணுவ வீரர்கள், வதோதராவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், 20 அடியில் குழந்தை சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், குழந்தையின் அசைவு கண்டறியப்பட்டதால், சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. அதேநேரம் மீட்புப் பணிக்காக போர்வெல் ரோபோவும் பயன்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, குழந்தை சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழியை தோண்டி, மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் குழந்தையை மீட்பது பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 4) காலை 5 மணியளவில், குழந்தையை மீட்ட மீட்பு படை வீரர்கள் உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மரு்ததுவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடற்கூராய்வு செய்யப்பட்டு குழந்தை ரோஷினியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் குஜராத் மாநிலம் சுரேந்தர் நகர் அருகே 12 வயது சிறுமி, 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தாள். 5 மணி நேரத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டாள். கடந்த ஆண்டு ஜூன் மாதம், சுரேந்தர் நகர் பகுதியில், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
விளைநிலங்களில் ஆபத்தான முறையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. பின்னர் 2020ம் ஆண்டு நெறிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டன. அதன்படி ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் போது அதை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட வேண்டும் என்றும், கிணறு அமைக்கப்பட்ட பின், அதன் மேற்பகுதியை இரும்பு மூடியைக் கொண்டு மூட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.