தெலங்கானா: தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், ரெகுபள்ளி பகுதியைச் சேர்ந்த பிரவீன் - ஸ்டெல்லா தம்பதியின் 2 வயது பெண் குழந்தை, ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி-2 என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது. மூளையை பாதிப்பதால், இந்த நோய் தாக்கியவர்களால் தானாக பேசவோ, நடக்கவோ, சாப்பிடவோ முடியாது.
இந்த நோயை குணப்படுத்த Zolgensma என்ற ஊசியை, அமெரிக்கா அல்லது சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்க வேண்டும். வரி உள்பட சுமார் 22 கோடி ரூபாய் செலவாகும். இந்த ஊசியை வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லாததால், பிரவீன் - ஸ்டெல்லா தம்பதி சமூக வலைதளம் மூலம் நிதியுதவி கோரினர்.
இந்த நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் பார்மா 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசியை இலவசமாக வழங்கியது. இதையடுத்து பொதுமக்களின் நன்கொடையால் போதுமான நிதி திரட்டப்பட்டு, சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள ரெயின்போ மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் சிறுமி குணமடைந்து வீடு திரும்பினார்.
இதுகுறித்து ரெயின்போ மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் ரமேஷ் கூறுகையில், "இந்த நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். குழந்தைகள் வளரும்போது, அவர்களின் கைகள், கால்கள், கழுத்து போன்றவற்றை அசைக்க முடியாமல் இருப்பது ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி-2 நோயின் அறிகுறி. இந்த நோய் ஏற்பட்டால் இரண்டு வயதுக்கு முன்பே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் முழுமையாக குணமடைய 3 முதல் 4 ஆண்டுகள் ஆகலாம்" என்று கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் ஹைதராபாத்தில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளுக்கு இதே போல், மக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், வெளிநாட்டிலிருந்து ஊசியை இறக்குமதி செய்ய மத்திய அரசு வரி விலக்கு அளித்தது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிதியுதவி அளித்த மனிதநேயம் கொண்ட மனிதர்களாலேயே இந்த குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன.