மத்திய பிரதேசம்: செஹோர் பகுதியில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கித்தவிக்கும் பெண் குழந்தையை மீட்க 24 மணி நேரத்திற்கும் மேலாக ராணுவத்தினர் போராடிவருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள செஹோர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை மதியம் முகலி கிராமத்தைச் சேர்ந்த சிருஷ்டி குஷ்வாஹா எனும் இரண்டரை வயது பெண் குழந்தை தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதனைப் பார்த்த குழந்தையின் தாய் கூச்சலிட்டு உடனடியாக அருகில் இருப்பவர்களை உதவிக்கு அலைத்துள்ளார். அதன் பெயரில் தற்போது கனரக வாகனங்கள் உதவியுடன் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப்படையினர் ஆழ்துளைக் கிணற்றுக்குப் பக்கவாட்டில் தோண்டி குழந்தை இருக்கும் பகுதியை அடையத் திட்டமிட்டு வருகின்றனர். குழந்தை தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது. தொடர்ந்து குழந்தைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
இதைப்பற்றி குழந்தையின் தாயிடம் கேட்டபோது, குழந்தை மதியம் 1 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தை தவறி விழப்போகும் போது நான் பார்த்தேன். விரைந்து உதவலாம் என்று சென்ற போது குழந்தை விழுந்துவிட்டது. நான் உதவிக்காக அருகில் இருப்பவர்களை அழைத்த போது என் மாமியாரைத் தவிர வேரு யாரும் வீட்டில் இல்லை. குழந்தை விழும்போது என் பெயரைச் சொல்லி கத்தியதைக் கேட்டேன் என்று கூறுகிறார்.
மத்திய பிரதேஷ் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இருப்பினும் பள்ளம் தோண்டுவதன் மூலமாக ஏற்பட்ட அதிர்வுகளால் குழந்தை இன்னும் பள்ளத்துக்குள் சென்றது என தெரிவித்து உள்ளார். முன்னதாக 40 அடி ஆழத்துக்குள் சிக்கியிருந்த குழந்தை தற்போது 100 அடியில் இருக்கிறார். தேசிய பேரிடர் மீட்பு நிதியம் (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) ஏற்கனவே மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தையை உயிருடன் வெளியே எடுக்கத் தீர்மானித்துள்ளோம் என சவுகான் கூறியுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு நிலைமையையும் ஆய்வு செய்தனர். மேலும் குழந்தையைப் பத்திரமாக மீட்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகள் தலைமையகத்திலிருந்து தொடர்ந்து மீட்புப்பணியை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து முதல்வர் தன் ட்விட்டர் பக்கத்தில், “தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாரு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது மட்டுமில்லாமல் உள்ளாட்சி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தார். மீட்புக்குழு தொடர்ந்து குழந்தையைப் பத்திரமாக மீட்கப் போராடி வருகின்றனர். நானும் குழந்தையின் நலனுக்காக வேண்டிக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.143 உயர்வு!